தடை செய்யப்பட்ட குருநகர் உள்ளூர் இழுவைப்படகுகளினால் தீவுப்பகுதி மக்கள் கடுமையான அசௌகரியங்களுக்குள்ளாகி உள்ளதாக தீவக கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமக்கு படகுகளை கட்ட உரிய இடம் இல்லாத்தால் நாம் என்ன இந்தியாவுக்கா போவது என இழுவைப்படகு தொழிலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஊர்காவற்றுறை – கண்ணகியம்மன் துறையில் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாதவாறு தடைசெய்யப்பட்ட உள்ளூர் இழுவை படகுகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
இழுவைப்படகுகள்
யாழ்ப்பாணம் – குருநகரில் இருந்து கடற்றொழிலுக்குச் செல்லும் இழுவைப்படகுகள் தொழிலை முடித்து கண்ணகையம்மன் துறையை வந்தடைகிறார்கள்.
நூற்றுக் கணக்கான படகுகள் துறையை வந்தடைவதனால் பிராயாணம் மேற்கொள்ளும் மக்கள் பல அசோகரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கண்ணகை அம்மன் துறையானது வெறும் பயணிகள் போக்குவரத்துக்கான சிறிய துறையாகும்.
இங்கு திடீரென குறித்த உள்ளூர் இழுவைப் படகுகள் துறையில் வந்து தமது மீன்கள், மீன்பிடி உபகரணங்கள், ஐஸ்பெட்டிகள் என்பனவற்றை இறக்கும் இடமாகவும், மீன்களை மாற்றிக் கொள்ளும் இடமாகவும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
போக்குவரத்து
மீன்களை ஏற்றும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் என பெரியளவில் இடநெருக்குவாரத்துக்குள் உள்ளாகியுள்ளது.
கண்ணகை அம்மன் துறையில் இருந்து அனலதீவு, எழுவை தீவு, பருத்தித்தீவு போன்ற பகுதிகளுக்கு மக்கள் அரச உத்தியோகத்தர் என பல நூற்றுக்கணக்கான பயணிகள் வள்ளத்தின் மூலமாக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தீவுகளுக்காக பொருட்களை பரிமாறும் துறையாகவும் இது விளங்குவதானால் , நூற்றுக்கணக்கான குருநகர் இழுவைப்படகுகளினால் மக்களின் போக்குவரத்தில் பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக மீனவ அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
துறை தொடர்பிலான கள ஆய்வுக்கான ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சமாசத்தினர் இன்று கண்ணகை அம்மன் துறைக்குச் சென்றிருந்தனர்.
இதன் போது குறித்த விடயங்கள் தொடர்பில் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் ஊடக சந்திப்பினையும் நடாத்தினர்.
இவ் இழுவைமடிப் படகுகள் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற ஒரு நிலைக்கு வந்திருந்த போது அப்போதிருந்த ஊற்காவற்றுறை பிரதேச செயலாளர் பயணிகள் துறையாக உள்ள துறையில் மீனபிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியாது என தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.