சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் யாழ்ப்பாணம் – ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.
இதற்காக தனது அமைச்சர் பதவியையும் இராஜினாமா செய்வதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பதவிகள்
சிங்கப்பூரில் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் பதவிக்காலம் வரும் செப்டெம்பர் 13ம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அவர் கடந்த மே 29ம் திகதி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மக்கள் செயல் கட்சியின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம், தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
தமிழரான இவர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சி, அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பிரதமர் லீ சியன் லூங் கூறுகையில், ‘தர்மன் விலகல் கட்சிக்கும், அமைச்சரவைக்கும் மிகப்பெரிய இழப்பு’ என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்ற அவர் பிரதமருக்கு பொருளியல் கொள்கைகள் குறித்து ஆலோசனையும் வழங்கி வருகின்றார்.
மேலும் இவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS), GIC இன் துணைத் தலைவர், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் பதவியில் அவர் ஆற்றி வரும் பிற பொறுப்புகளில் இருந்து விலகுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.