ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், தங்களது பிராந்தியப் பகுதிகளில் தீவிரவாதக் குழுக்கள் செயல்படுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இருப்பினும், சில தீவிரவாத இயக்கங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குழுக்கள் ஆகியவை மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அரசுக்கு தண்ணி காட்டி வருகின்றன.
தீவிரவாத இயக்கங்கள் பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் அத்துமீறி ஆளில்லாத பறக்கும் ட்ரோன்களை இயக்கி உளவு பார்ப்பதை தடுக்கும் விதமாக பிரான்ஸ் விமானப் படையானது அதிரடி திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. உயரப் பறக்கும் கழுகுகளை வைத்து உளவு விமானங்களை தாக்கி வீழ்த்துவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸ் விமானப் படையால் கடந்த ஆண்டு 4 கழுகுக் குஞ்சுகள் வாங்கப்பட்டு, உளவு ட்ரோன்களை கழுகின் கால்களால் பிடித்து நொறுக்கி வீழ்த்துவதற்காக சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இம்மாதம் முதல் இந்தக் கழுகுகள் களத்தில் இறக்கப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும் என விமானப் படை தெரிவித்துள்ளது.
ஆளுயர புற்களில் ட்ரோன்கள் மறைந்திருந்தாலும் இக்கழுகுகள் குறிவைத்து பிடிக்கும் எனவும், மேலும் இது போல அதிக அளவிலான கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் எனவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.