இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவான டியாகோ கார்சியாவில் புகலிடம் பெற்றுள்ள ஈழத்தமிழர்களின் விடயத்தில் நீண்டகால தீர்வை காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2021 அக்டோபரில் கனடா செல்லும் நோக்கத்துடன் கடற்றொழில் படகு ஒன்றில் பயணித்த ஈழத்தமிழர்கள், தமது படகு பழுதடைந்தமை காரணமாக, அமெரிக்க- பிரித்தானிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவில் தஞ்சமடைந்துள்ளனர்.
எனினும் பிரித்தானியா இவர்களுக்கு புகலிடம் அளிக்க மறுத்துவிட்டது, எனினும் நுவண்டாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்கீழ், அந்த நாட்டுக்கு இந்த ஈழத்தமிழர்களை அனுப்புவதற்கு பிரித்தானியா நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
திரும்பிச்செல்வதற்கு மறுப்பு
இதன் காரணமாக குறித்த தீவில் புகலிடம் கோரிய பலர் மீண்டும் நாடு திரும்பினர். பலர் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுக்கு சென்றுள்ளனர்.
தற்போது அந்த தீவில் 60 ஈழத்தமிழர்கள் தங்கியுள்ளதாகவும் இவர்கள் இலங்கைக்கு திரும்பிச்செல்ல மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த முகாமுக்குள் குறைந்தது 12 தற்கொலை முயற்சிகள் மற்றும் குறைந்தது இரண்டு பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை முயற்சி
இதில் மூன்று தமிழர்கள் தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சிகளைத் மேற்கொண்ட நிலையில் இவர்கள் தீவில் இருந்து வெளியேற்றப்பட்டு நுவண்டாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களில் நான்கு பேர் ‘பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு’ அனுப்பப்படுவதற்கான அவர்களின் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் 20 மாத காத்திருப்புக்குப் பின்னர், இந்த ஈழத்தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள், தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.