எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் சிவபெருமான். நாம் அறிந்தோ, அறியாமலோ பிற உயிர்களுக்கு சில தீங்குகளை செய்கிறோம். அதன் காரணமாக நமது பாவக் கணக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் இருக்கும் எந்த உயிருக்கு தீங்கு விளைவித்தாலும் அது இறைவனுக்கு இழைக்கும் தீங்காகவே பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பாவங்களை களைவதற்கும் இறைவன் நமக்கு வாய்ப்பு தருகிறார்.
புண்ணிய நதிகளில் நீராடுவது, தீர்த்த யாத்திரை, தல யாத்திரை போன்றவை இதுபோன்ற பாவங்களை தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்படுபவையே. ‘அப்படியானால் பிற உயிர்களை துன்புறுத்திவிட்டு, புனித நீராடினால் பாவம் போய்விடுமா?’ என்று கேட்பது சரியான புரிதல் அல்ல. இந்த உலகத்தில் அனைத்து உயிர்களும் சமமானவை, அவைகளுக்கும் இந்த மண்ணில் வாழ உரிமை இருக்கிறது என்பதை உணர்தலே சரியான புரிதல். இனியாவது பாவங்கள் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை எடுப்பதே முக்கியமானது. நாம் செய்யும் பாவங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, புண்ணியங்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளும் ஒரு நாள்தான் சிவராத்திரி.
விநாயகர் சதுர்த்தி, ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, அனுமன் ஜெயந்தி போன்றவை எல்லாம் இறைவனின் அவதாரங்களை குறிப்பிட்டு நடத்தப்படும் விழாக்கள். சிவபெருமானுக்கு ஜெயந்தி விழா என்பது கிடையாது. ஏனெனில் அவர் பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற்பட்டவர். அதே வேளையில் ஈசனுக்கு சிறப்பு மிகுந்த நாள் என்று ஒன்று உண்டு. அதுதான் சிவராத்திரி.
மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரியே, ‘மகா சிவராத்திரி’ என்று கொண்டாடப்படுகிறது. உலகிற்கு ஆதாரமான சிவபெருமான், உலக உயிர்களை படைத்ததும், தனக்குள் ஐக்கியப்படுத்தியதும் இந்த நாளில்தான் என்கிறது புராணங்கள். இதனை ‘லயக்ரம ஸ்ருஷ்டி தினம்’ என்கிறது சாஸ்திரங்கள். ‘லயம்’ என்றால் ஒடுக்குதல், ‘ஸ்ருஷ்டி’ என்றால் படைத்தல் என்று பொருள். அதாவது படைத்தலுக்கும், அழித்தலுக்கும் ஆதாரமான இறைவனுக்கான விழாவே ‘மகா சிவராத்திரி’.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது. அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார். சதுர்த்தசியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி.
ஒரு காலத்தில் உலகம் அழிந்து யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கியது. அந்தகாலம் சூழ்ந்த அந்த இருளில் பார்வதி சிவபெருமானை ஆகமங்களில் கூறியுள்ள படி நான்கு காலம் வழிபட்டாள். அவ்வாறு அவளால் வழிபட்டதன் நினைவாக தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நோக்கி இந்நாளில் நான் எவ்வாறு வழிபட்டேனோ அப்படியே வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பரமசிவனும் அப் படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். அதன் படியே அன்று முதல் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக வாசம் கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கள வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. சிவராத்திரி நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என 5 வகைப்படும்.
மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு சிவபூஜை செய்து அருகில் உள்ள சிவன்கோவில்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய வேண்டும். முடியாதவர்கள் சிவலாயங் களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜை அபிஷேகங்களை கண்டு களிக்கலாம். பால், தயிர், நெய், தேன், பூஜை பொருட்களை கொடுக்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.
விரதம் இருக்கும் முறை :
மகாசிவராத்திரி பூஜையை வீட்டில் செய்ய விரும்புபவர்கள் அதிகாலையில் நீராடி, தூய ஆடைகளை அணிந்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபட வேண்டும். மாலையில் வீட்டில் ஒரு தூய்மையான இடத்தில் அல்லது பூஜை அறையில் சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். இரவு 4 காலமும் பூஜை செய்ய வேண்டும்.
இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்திலாவது கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்ய வேண்டும். அதிகாலை 3 மணிக்கு வில்வ இலை மற்றும் மலர்களால் தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாய நம நமச்சிவாய என மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான பாடல்கள் கதைகளை கேட்கலாம். சினிமா, டி.வி. பார்க்க கூடாது.
முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், காய்கறி ஆகியவற்றையும், வில்வ பழத்தையும் நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் ஜாமத்தில் லட்டு, பலாப்பழத்தையும், மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயாசம், மாதுளம் பழங்களையும் நிவேதனம் செய்து வணங்கி வழிபட வேண்டும். நான்காம் ஜாமத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பலகாரம் மற்றும் அந்தக்காலத்தில் விளையும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஜாமத்தில் பூஜை முடிந்ததும் தன்னால் முடிந்த அளவு தானங்கள் செய்ய வேண்டும். விடிந்ததும் நீராடி, நித்ய கடன்களை முடித்து விட்டு சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை சாப்பிடலாம்.