இலங்கை வந்துள்ள தாய்லாந்தின் யானை பாகர்கள் இருவர் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நோய்வாய்ப்பட்டுள்ள தாய்லாந்து யானையான சக் சுரினுக், உணவளித்து நீராட்டியதன் மூலம் அதனுடன் பழக ஆரம்பித்துள்ளனர்.
பிரத்தியேகமாக கட்டப்பட்ட கூண்டில் குறித்த யானை, உள்ளே நுழையவும், வெளியேறவும், தங்கியிருப்பதற்கும், பயிற்சி அளிக்கும் செயற்பாடுகள், இந்த யானை பாகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்புக்களாகும்.
சுமார் இரண்டு வாரங்களில் இந்த பழக்கப்படுத்தலை நிறைவு செய்து, திட்டமிட்டபடி யானையை தாய்நாட்டுக்கு கொண்டு செல்லலாம் என அவர்கள் இருவரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தாய்லாந்து யானை பாகர்கள் இருவரும் பேசும் தாய் மொழிக்கு குறித்த யானை பதிலளித்ததாகவும், அது உணவுக்காக சைகை காட்டியதாகவும், இலங்கையின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரின் மூலோபாயக் குழுவின் ஆலோசகர் காஞ்சனா சில்பா – அர்ச்சா, தனது முகப்புத்தக பதிவில் தெரிவித்துள்ளார்.
புதிய கூண்டுகளை தயாரிக்க சிறப்பு ஏற்பாடு
இந்நிலையில், 30 வயதான சக் சுரின் என்ற ஆண் யானை எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இந்த பயணத்தின் போது அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய கூண்டுகளை தயாரிப்பது உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
2001 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்று யானைகளில் சக் சுரினும் ஒன்றாகும். உரிய பராமரிப்பின்மையால், யானை, சுகவீனமடைந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து தாய்லாந்து அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டது.
இதனையடுத்து யானையின் நிலையை மதிப்பிடுவதற்காக தாய்லாந்து கால்நடை மருத்துவர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வழங்கிய பரிந்துரையின்படி, அதனை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்லும் முடிவை தாய்லாந்து அரசாங்கம் மேற்கொண்டது.