சிவராத்திரி அன்று காலையில் எழுந்து நீராடி, தூய்மையான உடைகளை உடுத்திக் கொண்டு நெற்றியிலே நீறு துலங்க. சிவபெருமானை தியானித்து பூஜை செய்ய வேண்டும். அன்று உபவாசம் இருக்க வேண்டும்.
பால், தயிர், நெய், தேன் இவற்றினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு நறுமண மலர்களாலும். வில்வ இலைகளாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
பின்னர் தூப தீப நைவேத்யங்கள் செய்து, ‘நமசிவாய என்ற ஐந்தெழுத்தை இயன்ற வரை ஜபிக்க வேண்டும். அன்றைய இரவை உறங்காது கழிப்பது பெரும் புண்ணியமாகும்.
சிவபெருமானின் திருப்பாதத்திலே ‘ந’ என்ற எழுத்தும்.திருவுந்திக் கமலத்திலே ‘ம’என்ற எழுத்தும். திருத்தோள்கள் இரண்டிலும் ‘சி’ என்ற எழுத்தும். திருவதனத்திலே ‘வா’ என்ற அட்சரமும். கடை முடியிலே ‘ய’ என்ற எழுத்தும் உள்ளன என்பர். சிவபெருமானின் திருத் தோற்றமே ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரமாகக் காட்சி தருகின்றது.
சிவராத்திரியன்று அவசியம் சொல்ல வேண்டிய துதி
ஸெளராஷ்ட்ரே சோமநாதம் ச
ஸ்ரீசைலே மல்லிகார்ஜூனம்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம்
ஓம்காரம் அமலேச்வரம்
பரல்யாம் வைத்ய நாதம் ச
டாகின்யாம் பீம சங்கரம்
சேது பந்தேது ராமேசம்
நாகேசம் தாருகாவனே
வாரணஸ்யாம் து விச்வேசம்
திரியம்பகம் கௌதமீதடே
ஹிமாலயேது கேதாரம்
குச்மேசம் ச சிவாலயே’
பாரதத் திருநாட்டில் பன்னிரு ஜோதி லிங்கத் தலங்கள் உள்ளன. சோமநாதர், மல்லிகார்ஜூனேசுவரர், மஹா காலேசுவரர், ஓம்காரேசுவரர் வைத்யநாதர், பீமசங்கரர், ராமேசுவரர், நாகேசுவரர், விஸ்வநாதர், திரியம்பகேசுவரர், கேதாரேசுவரர், குஷ்மேசர் ஆகியன இந்தப்பன்னிரு ஜோதி லிங்கங்களின் திருநாமங்களாகும்.
இந்த துதியை அன்றாடம் சொல்பவர்களுக்கு ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் நீங்கும். குறைந்த பட்சம் சிவராத்திரி அன்றாவது இத் துதியை அவசியம் பாராயணம் செய்ய வேண்டும்.