வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் ஊடாக யாழில் உள்ள இந்திய துணை தூதுவரிடத்தில் குறித்த மகஜர் நேற்றையதினம் (14.06.2023) கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி அ.அன்னராசா இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் (15.06.2023)ஆம் திகதி இந்தியாவில் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிற நிலையில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத தொழில்
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, தீவக கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பான நடவடிக்கைகள் வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றது.
இதனால் கடற்றொழிலாளர்களும் மீன் சாப்பிடும் மக்களும் பாதிக்கப்படுவர். டொலர் வருகிறது ஏற்றுமதி இடம்பெறுகிறது என்பதற்காக அரசாங்கம் சட்டவிரோதமான தொழிலை கனகச்சிதமாக அனுமதிக்கிறது.
கடற்றொழிலிருந்து வடக்கு கடற்றொழிலாளர்களை அந்நியப்படுத்தும் முயற்சி தற்போது இடம்பெற்று வருகின்றது. சீன கடலட்டைப் பண்ணைகளால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சட்டவிரோதமான தொழில் மற்றும் சீன கடலட்டைப் பண்ணை விவகாரங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களும் மூன்று கடற்றொழிலாளர் சமாசங்களும் இணைந்து குறித்த மகஜரை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.