தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சில தீவுகளை சொந்தம் கொண்டாடுவதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கிடையே பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. இப்பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தில் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
இந்தக் கடல் பரப்பில் அவ்வப்போது ராணுவப் பயிற்சிகளை சீன அரசானது மேற்கொள்ளும். இதனால், சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கு சீன அரசு ஆளாகும். மேலும், சர்வதேச நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளிவிட்டு சீன அரசானது, கடல் பகுதிகளில் செயற்கைத் தீவுகளை அமைத்து, அத்தீவின் மீது ராணுவத் தளங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் உள்ள தீவுகளில் சீன அரசானது ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கும் புகைப்படங்களை அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. மேலும், இது போல பல ராணுவத் தளங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.