சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம், சசிகலா -இளவரசி -சுதாகரன் ஆகியோருக்கு தலா பத்துகோடி ரூபா அபராதம் என 130 கோடி ரூபா அபராதம் விதித்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.
மேல்முறையீட்டில் அவருடைய தீர்ப்பை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது பற்றி நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் நீதிமன்றத்தில் அவருக்கு உதவியாளராக இருந்து ஓய்வுபெற்ற பிச்சமுத்து கூறியதாவது,
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி அவருடன் வேலைபார்த்தவர்கள் பூங்கொத்தை எடுத்துக்கொண்டு, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் குன்ஹாவை சந்தித்தோம்.
அப்போது அவர், ’நான் என் கடமையைச் செய்தேன். உச்ச நீதிமன்றம் அதை அங்கீகரித்துள்ளது. எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ஒரு நீதிபதி முன்பு வரும் வழக்குகளில் ஒன்றைப்போலதான், இந்த வழக்கும்’ என்றார் குன்ஹா.
அவர் தனது தீர்ப்பில், அபராதத்தைக் கட்டுவது குறித்தும் எழுதியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் பெயரில் பல்வேறு வங்கிகளில் 20 கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்படாத பணமாக இருக்கிறது. அதை ரிசர்வ் வங்கி கைப்பற்றி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.
அதேபோல் ஜெயலலிதாவின் நகைகளை ரிசர்வ் வங்கியும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும் 20 கோடிக்கு ஏலம் விட வேண்டும்.
ஜெயலலிதாவின் பெயரில் இருக்கும் பூர்வீகச் சொத்துகளான போயஸ் கார்டன் இல்லத்தின் தரைதளம், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், ஹைதராபாத்தி லுள்ள மற்றொரு பிளாட், காஞ்சிபுரம் செய்யாறு பகுதியில் உள்ள நிலம் ஆகியவற்றை ஏலம் விட்டு மீதமுள்ள 60 கோடியை கட்டவேண்டும்.
இந்தச் சொத்துகளை ஏலம் விடும் வேலைகளை கர்நாடக அரசு செய்யவேண்டும்’ என்று விவரித்தார்.
கர்நாடக முன்னாள் அட்வகேட் ஜெனரலான ரவிவர்மா குமார் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார் கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா.
அந்தக் குழுதான் போயஸ்கார்டனை ஏலத்துக்கு விடும் யோசனையை கர்நாடக அரசுக்கு தெரிவித்துள்ளது.