திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள புல்மோட்டை நகரில் புதிய பௌத்த விகாரையொன்றினை அமைக்கும் பணியில் 25 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் பிக்குகள் இரவு பகலாக அயராது உழைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புல்மோட்டை நகருக்கு தெற்கே அரிசிமலையில் வசித்து வரும் அம்பாந்தோட்டையை சேர்ந்த திலகவன்ச நாயக்கா என்ற பிக்கு ஒருவரே இந்த விகாரை அமைப்பு நடவடிக்கைகளில் மூளையாக செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் விகாரை திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், குறித்த பகுதிகளில் பௌத்த கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக புல்மோட்டை மற்றும் தென்னை மரவாடியில் நிலத்தை சுவீகரிக்கும் நடவடிக்கையில் பிக்கு ஈடுபட்டுள்ளார்.
இராணுவத்தினரால் இடைமறிப்பு
தமிழ் கார்டியன் செய்தியாளர்கள் புதிய விகாரை தொடர்பில் ஆராய முற்பட்ட நிலையில் இலங்கை இராணுவத்தினரால் இடைமறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், விகாரை அமைப்பு திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்த நகரம் பாரம்பரிய தமிழர் தாயகத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் குறிப்பிடத்தக்க மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையில், 2009 ஆம் ஆண்டு ஆயுதப்போர் முடிவுக்கு வந்ததிலிருந்து, புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சிங்களக்குடியேற்றம் குறித்து தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகின்றனர்.
இப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பௌத்த விகாரைகள் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டமை தொடர்பிலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.