இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர் வசதி மையம் நிறுவப்பட்டுள்ளது
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் உட்பட வசதிகளை வழங்க உலக வர்த்தக மையத்தில் முதலீட்டாளர் வசதி மையம் நிறுவப்பட்டுள்ளது என்றும் இந்த மையம் அனைத்து அரச நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து செயற்படும் என்றும் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் தமது பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களிடம் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தமது பிரச்சினைகளை தாமதமின்றி தீர்த்துக்கொள்ள இந்த நிலையம் அவர்களுக்கு உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் வரை தற்காலிக தீர்வாக இந்த நடைமுறை நடைமுறையில் இருக்கும் என்றும் இலங்கையில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் சிக்கலான சூழ்நிலைகள் அடுத்த வருடத்திற்குள் களையப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.