இராணுவ வீரர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சர்வதேச பயணத்தடைகள் விடயத்தில் வெளியுறவு அமைச்சகம் தலையிட வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் நடந்த தேசிய பாதுகாப்புத்துறைசார் மேற்பார்வைக் கூட்டத்தில் இந்த பயணத்தடைகள் இராணுவ வீரர்களின் மன உறுதியை பாதிக்கும் என குழுவின் தலைவரான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தூதுவர்கள் மூலமாகவும், உயர்மட்டக் கலந்துரையாடல்கள் மூலமாகவும் வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை அந்தந்த அரசாங்கங்களுக்குத் தொடர்ந்து தெரிவித்து வருவதாக இதன்போது இலங்கையின் வெளியுறவு செயலாளர் விளக்கியுள்ளார்.
புனித இடங்களின் பாதுகாப்பு உறுதி
இது தொடர்பான தீர்மானங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அந்தந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கை இராணுவத்தின் தற்போதைய முயற்சிகள் மற்றும் சில பாதுகாப்பு இராணுவ முகாம்களை திரும்பப்பெறுதல் மற்றும் தேசிய பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்தும் குழு, இதன்போது கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், இராணுவத்தை திரும்பப்பெறுவது தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் புனித இடங்களின் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அமர்வின்போது பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்துள்ளார்.