எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் புத்தரின் போதனைகளின் படியே பணிகளை முன்னெடுப்பேன் என புத்தசாசன, மத கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் கலந்துரையாடலின் போது புத்தசாசன, கலாசார அமைச்சு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
சட்டவிரோத காணி கொள்ளை
மேலும், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் கீழ் இடம்பெற்ற சட்டவிரோத காணி கொள்ளையே வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணி கொள்ளைக்கு முக்கிய காரணம் என எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.
பௌத்த சாசனம் தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சவால் இன்று நேற்றல்ல நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
பௌத்த பிக்குகளின் எதிர்ப்புக்களும் நிலவி வருகிறது. நம் நாட்டில் பௌத்த மதம் தொடர்பில் இரு சட்டங்கள் காணப்படுகின்றன. அந்தச் சட்டங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
புத்தரின் சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் அரச சட்டம் இருக்கிறது. இரண்டையும் நாம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
ஆனால் இதனை சிலர் தவறாக புரிந்துகொள்கின்றார்கள். எனினும் இந்த சட்டமூலங்கள் இரண்டையும் கருத்தில்கொண்டே நாங்கள் செயற்படுகிறோம்.”என தெரிவித்தார்.