கொழும்பு – வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் வீட்டுப்பணிப்பெண் ராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக தொழில்புரிந்த பதுளை தெமோதர பகுதியை சேர்ந்த 41 வயதான ராஜகுமாரி என்ற பெண் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்ப்பட்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று(21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட அதிகாரிகளின் வழிகாட்டலில் சாட்சியமளித்த மகேந்திரன் சுரேஸ் என்ற நபர், வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குள் இராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதைக் கண்டதாகவும் சாட்சியம் வழங்கியுள்ளார்.
நேரில் கண்டவர் சாட்சியம்
சம்பவம் தொடர்பில் அவர் வழங்கிய சாட்சியம் பின்வருமாறு, ஒரு நாள் புறக்கோட்டை பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து கைவிலங்கிட்டு வாகனத்தில் ஏற்றி பொரளை – கோட்டா வீதியில் உள்ள ராஜகுமாரி வேலை செய்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இதன்போது ராஜகுமாரியை அழைத்து வந்த பொலிஸார் ஒருபக்க கைவிலங்கை அகற்றி அவரின் கையில் இட்டு ராஜகுமாரியை அழைத்துச் சென்றபோது அவர் நன்றாக நடந்து சென்றார். வாகனத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி ராஜகுமாரியிடம், “மோதிரம், வாசனை திரவியப்போத்தல் மற்றும் காலணிகளைத் திருடினாயா” என்றும் வினவினார்.
இதன் பின்னர் தானும் ராஜகுமாரியும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்னையும், ராஜகுமாரியையும் தாக்கினார்கள். அவர்களில் ஒருவர் மொட்டையுடையவர் எனவும் மற்றையவர் ஒல்லியான உயரமானவர்.
இதன்போது ஒல்லியான உயரமான அதிகாரி ஒருவர் உயிரிழந்த ராஜகுமாரியை றப்பர் குழாயால் தாக்கியதை நான் பார்த்தேன். இதன் பின்னர் “சுதர்மா மேடம்” வந்து தாக்க வேண்டாம் என்றும், பிரச்சினையை தீர்க்குமாறும் கேட்டுக்கொண்டதாக சாட்சியாளர் மேலும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் பின்னர் வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக எதிர்வரும், 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.