ஊழல் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டிது தான் எனது விருப்பமாக இருக்கிறது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(21.06.2023) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன்று நீதியமைச்சரினால் மூன்று சட்ட மூலங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த விவாதத்தை நாங்கள் பார்க்கின்றபோது, ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற அடிப்படையிலேயே பல உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர்.
பெரும்பாலும் எதிர்க்கட்சியில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளித்துவிட்டு மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது இதனை நடைமுறைப்படுத்துகின்றனரா என்ற கேள்வி எழுகின்றது.
சட்ட மூலம் உதவவேண்டும்
அந்தவகையில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சம்பந்தமான பிரேரணையை எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நாம் வரவேற்கிறோம். எனினும், இதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் எமது யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
இவ்வாறான சட்டங்கள் நாம் கொண்டுவந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதுதான் தற்போதைய பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
ஊழல் விவகாரத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசப்படுகின்றனர். அரச ஊழியர்கள் தமது கடமைகளை சரிவர செய்வதற்கு இந்த சட்ட மூலம் உதவவேண்டும்.
முதற்கட்ட நடவடிக்கை
இந்த சட்டமூலத்தை விரைவாக நடைமுறைக்கு கொண்டுவந்து ஊழலற்ற நாடாக எமது நாட்டை கொண்டுவர முதற்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறேன்.
அத்தோடு, கிழக்கு மாகாணத்தில் எச்.என்.டீ. தகைமையுள்ள ஆங்கில ஆசிரியர் பதவி வெற்றிடத்தை நிறப்புவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.
இதனால் பரீட்சார்த்திகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, குறித்த பெறுபேற்றை உடனயாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அத்தோடு, இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனரின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.