பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையில் (SBSCH) சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையொன்று திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பேராதனை போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்தை செலுத்தியதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக இதற்கு முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், குழந்தையின் மரணத்திற்கு மயக்க மருந்தே காரணம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் சுகாதார நிபுணர்கள் சங்கங்கள்,பெற்றோர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.
சுகாதார அமைச்சர் மறுப்பு
இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயலிழந்த மயக்கமருந்து தடுப்பூசி குழந்தைகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும், தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சிக்கல்களினால் இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.
இக்குழந்தையின் மரணத்திற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும், ஆனால் மயக்க ஊசி செலுத்தியதன் விளைவால் ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் எனினும் மரணம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாண வைத்தியசாலைகளில் சுகாதார உதவியாளர்களான 253 பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு விருது வழங்கும் வைபவம் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (21) இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அறுஷா அஷ்விதா வெல்கம என்ற இரண்டரை வயது குழந்தை கடந்த 25ம் திகதி உயிரிழந்திருந்தது.
வெளியான காரணம்
திகன ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த குழந்தை, கடந்த 22 ஆம் திகதி காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
எனினும் 6 மணித்தியால சத்திரசிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ஆம் திகதி குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான வலிமிகுந்த சூழ்நிலைகளில் வைத்தியசாலை அதிகாரிகள் குழந்தைகளுக்கு மயக்க மருந்தை வழங்கமாட்டார்கள் என சம்பந்தப்பட்ட வைத்தியசாலை அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சுகாதாரத்துறை தொடர்பான விடயங்களில் சில ஊடகங்கள் பொய்யாக செய்திகளை வெளியிடுவதாகவும், இது தொடர்பில் ஊடகங்கள் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.