ஜாஎல துடெல்லவில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 மாணவிகளுக்கு உடலில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வகுப்பறையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தையடுத்து, உடனடியாக மாணவிகளின் பெற்றோர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டதாகவும், நோய்வாய்ப்பட்ட 10 சிறுமிகள் ஜாஎல பிராந்திய வைத்தியசாலையிலும், 6 பேர் சீதுவ விஜய குமாரதுங்க வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை அதிபர் குறிப்பிட்டார்.
நோய்வாய்ப்பட்டமைக்கான காரணம்
ஜாஎல துடெல்ல நிமல மரியா பெண்கள் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அருகருகே நின்று அரிப்பு ஏற்பட்டமையினால் கூச்சலிட்டு, குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையினால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சிறுமிகள் திடீரென நோய்வாய்ப்பட்டமைக்கான காரணம் கதிரைகள் மற்றும் மேசைகளில் சில கிருமிகள் இருந்தமையாக இருக்கலாம் என ஜாஎல வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி லக்சிறி லொகுலியான தெரிவித்தார்.
பரிசோதகர்கள் குழு விசாரணை
ஜாஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் ராகம போதனா வைத்தியசாலையிலும், விஜய குமாரணதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜாஎல பொது சுகாதார பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான பரிசோதகர்கள் குழு பாடசாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஜாஎல சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.