இலங்கையின் கால்நடைத் துறையின் அபிவிருத்திக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்க பிரேசில் இணங்கியுள்ளது.
பால் உற்பத்தித் தொழிலுக்கு மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பிரேசிலில் அந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குவதற்காக இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரேசிலிய ஒத்துழைப்புக்கான ABC- Agency for Brazilian Cooperation ஏஜென்சியின் தூதுக்குழுவினர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து இது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
பிரேசிலிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு
இலங்கைக்கான பிரேசிலிய பிரதி உயர்ஸ்தானிகர் மோனிகா நாசர் (Monica Nasser), பிரேசிலின் விகோசா ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் (Federal University Vicosa,) விலங்கியல் துறையின் பேராசிரியர் ஒடிலன் கோம்ஸ் பெரேரா (Odilon Gomes Pereira), ஏபிசி பிரதிநிதி அன்ட்ரியா வோன் ரக்கிவிஸ்தே டில்மன் (Andrea Von Rakiwisthe Tillmann), மற்றும் நெல்சி பெரஸ் கெய்க்செட்டா (Nelci Peres Caixeta) மற்றும் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க மற்றும் மருத்துவர் நிரோஷன் கமகே உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
பிரேசிலிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு முகமையால் வழங்கப்படும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு விலங்குகளின் ஊட்டச்சத்து, கால்நடை வளர்ப்பு, பண்ணை நிர்வாகம் மற்றும் மேலாண்மை, அத்துடன் பால் போக்குவரத்து, சேமிப்பு மற்றும் பாலின் தரத்தை பராமரிப்பது தொடர்பாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளது