கொழும்பு – கொலன்னாவையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஆசிரியர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – கொலன்னாவ ரஜமஹா விகாரைக்கு அருகில் இன்று (22.06.2023) காலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏழு வயதுடைய பாடசாலை மாணவி படுகாயமடைந்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் பயணித்த உயிரிழந்த ஆசிரியர், தனது மகளை மெகொட கொலன்னாவையில் இருந்து குப்பியாவத்தை நோக்கி பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, கொலன்னாவ ரஜமஹா விகாரைக்கு அருகில் அதே திசையில் பயணித்த பேருந்து திடீரென இடப்புறம் திரும்பியதில் மோட்டார் சைக்கிள் பேருந்துக்குள் சிக்கி, சுமார் ஐம்பது மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் குறித்த பேருந்தின் மீது தவறி விழுந்து சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட சாரதி
விபத்தையடுத்து, கோபமடைந்த பிரதேசவாசிகள், விபத்தை ஏற்படுத்திய பேருந்தையும்,அதன் சாரதியையும் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாகவும், பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட பேருந்து சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பாதுகாப்பு கருதி முல்லேரியா பொலிஸாரிடம் பேருந்து ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.