தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் பரபரப்பினை நாம் யாருக்கு விளக்க வேண்டியதில்லை. சூழ்நிலையினை அனைவருமே கண்முன்னே அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
மக்கள் மீது அக்கறை இல்லாமல் சுற்றிவரும் எம்.எல்.ஏக்கள் மத்தியில் ஒரு உயிரைக் காப்பாற்ற மருத்துவராக எம்.எல்.ஏ ஒருவர் மாறியுள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மிசோரம் மாநிலத்தில் சாய்ஹா பகுதி எம்.எல்.ஏ பெய்ச்சுவா(52). 1991-ம் ஆண்டு மருத்துவப்படிப்பை முடித்த பெய்ச்சுவா 2௦ வருட மருத்துவ சேவைக்குப் பின் அரசியல் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.
கடந்த 2013-ம் ஆண்டு மிசோரம் தேசிய முன்னணிக் கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ ஆனார். மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான பெய்ச்சுவா இக்கட்டான சூழ்நிலையால், தனது தொகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீவிர வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருப்பதாகவும், உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமென்றும் நேற்று எனக்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாக எனது அரசியல் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நான் சாய்ஹா மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தேன்.
மருத்துவமனையில் அந்த பெண்ணின் வயிற்றில் மிகப்பெரிய துளை இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவேளை அறுவைசிகிச்சை செய்யப்படாமல் போனால் அந்த பெண் இறக்க நேரிடும் என்பதும் எனக்குத் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பெண் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.