எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக கடற்றொழிலாளர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து மண்டபம் கடற்றொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து 405 விசைப்படகுகளில் 1600 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 21ஆம் திகதி காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்
அன்றைய தினம் நள்ளிரவு நெடுந்தீவு அருகே கடற்றொழிலாளர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடம் அந்தோணி பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அதிலிருந்த தேவராஜ், நடராஜன், நாகசாமி, சந்தியா, ஜிப்ரான் ஆகிய 5 கடற்றொழிலாளர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளையும், அதிலிருந்த 17 கடற்றொழிலாளர்கள் என மொத்தமாக 4 விசைப்படகுகள் மற்றும் 22 கடற்றொழிலாளர்களையும் சிறைபிடித்து யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கமைய மீன்பிடி தடைக்காலம் நீங்கிய பின் தொழிலுக்குச் சென்ற முதல் வாரத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடற்றொழிலாளர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் கடற்றொழிலாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
வேலை நிறுத்தப் போராட்டம்
இந்நிலையில் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்தும், மண்டபம் கடற்றொழிலாளர்கள் 5 பேர் உட்பட 22 தமிழக கடற்றொழிலாளர்களை படகுடன் உடனடியாக விடுவிக்க கோரி மண்டபம் கோயில் வாடி வடக்கு மற்றும் தெற்கு கடற்றொழிலாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசை படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.