மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் சமீப காலமாக அரசியலில் நிலவி வரும் மாற்றங்கள் மக்களால் ஏற்க முடியாதவையாகவே உள்ளது. ஜெயலலிதா இருந்த போது முதலமைச்சராக கை காட்டி சென்றவர் அடுத்த முதல்வரா.? ஜெயலலிதாவின் தோழியாக 30 வருடத்திற்கும் மேலாக இருந்த ஒரே தகுதியை வைத்து முதல்வராக நினைப்பவர் அடுத்த முதல்வரா?
அல்லது ஜெயலலிதாவின் உறவினர் என்ற ஒரே தகுதியுடன் புதுக்கட்சியை ஆரமித்திருக்கும் தீபா அடுத்த முதல்வரா என ஆளும் கட்சியே ஆட்டம் கண்டுள்ளது.
இந்நிலையில் இது வரை அரசியல் பற்றி எந்த ஒரு கருத்தையும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்த நடிகர் ஜீவா, தனது சமூக வலைத்தளத்தில் திடீரென அரசியலில் குதிப்பவர்களுக்கு தனது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் கூறியுள்ளதாவது: ஜெ. தீபா, உங்களுக்கு அத்தையின் சொத்துக்கள் வேண்டும், அத்தையின் கட்சி வேண்டும், அத்தையின் பதவிவேண்டும். அத்தைக்கு கிடைத்த தண்டனை மட்டும் உங்களுக்கு வேண்டாமா?
அத்தையின் வாரிசுதானே..? உங்கள் அத்தையை ஊழல் செய்த குற்றவாளியென உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த அதே நாளில், அதை ஒரு பெருமையாக நினைத்துக் கொண்டு உங்களால் எப்படி அரசியல் பிரவேஷம் செய்ய முடிகிறது. உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால் அந்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை அவருக்கு பதிலாக நீங்கள் அனுபவித்து உங்கள் தலைவி மீதுள்ள களங்கத்தை போக்கிவிட்டு அரசியலுக்கு வாருங்கள்… மக்களை ஏமாற்றாதீர்கள். தீபாவுக்கு, என் தாழ்மையான வேண்டுகோள். தமிழக மக்கள் ஐம்பது ஆண்டுகளாக ஏமாந்தது போதும். உங்கள் சுயநலத்திற்காக கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை நீங்களும் ஏமாற்றாதீர்கள்!
தமிழகத்தின் தற்போதய தேவை சுயநல, அனுதாப ஆட்சி இல்லை. அறவழியிலான ஆக்கபூர்வ ஆட்சி, என்று கூறியுள்ளார். நடிகர் ஜீவாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.