ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளின் மிரட்டல் காரணமாகவே மாஸ்கோவை கைப்பற்றும் முயற்சியிலிருந்து வாக்னர் குழு பின்வாங்கியதாக பிரித்தானிய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாக்னர் ஆயுதக்குழு தளபதிகளின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் தமது வாக்னர் வீரர்கள் 2 ஆயிரம் பேரை கொன்றுவிட்டதாகக் கூறி மாஸ்கோ நோக்கி படைகளுடன் வாக்னர் தளபதி பிரிகோஷின் முன்னேறியிருந்தார்.
ரஷ்யாவிற்கு எதிராக ஆயுத கிளர்ச்சி
இவ்வாறான பின்னணியில் ரஷ்யாவிற்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டு மாஸ்கோ நோக்கி முன்னேறி சென்ற வாக்னர் ஆயுதக்குழு தளபதி பிரிகோஷின், பெலாரஸ் அதிபர் நடத்திய பேச்சுவார்த்தையினை தொடர்ந்து போர் தொடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கியிருந்தார்.
இதற்கமைய, கடந்த 24 மணி நேரமாக நீடித்த போர் பதற்றம் முடிவுக்கு வந்ததால் ரஷ்யர்கள் ஆரவாரம் செய்து பிரிகோஷினை வழியனுப்பி வைத்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் வாக்னர் குழுவில் 8,000 வீரர்கள் மாத்திரம் இருந்ததாகவும், ரஷ்ய இராணுவத்துடன் மோதினால் படுதோல்வி அடைந்து கொல்லப்படுவோம் என்ற சந்தேகத்தில் பிரிகோஷின் பின்வாங்கியிருக்கலாம் என உளவுத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், வாக்னர் குழு ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள் என அமெரிக்க உளவுத்துறைக்கு முன்கூட்டியே அறிந்தும் மெளனம் காத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரிகோஷின் பெலாரஸுக்கு சென்ற நிலையில், வாக்னர் குழு தளபதிகளை நீக்கி விட்டு அதன் வீரர்களை ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக்கொள்ள புடின் முயற்சிப்பார் எனவும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.