கிளிநொச்சி மாவட்டத்தில் நான்காயிரத்து 603 குடும்பங்களுக்குரிய வீட்டு தேவைகள் காணப்படுவதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டு திட்ட வசதிகள் இன்றி கடந்த 12 பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாக தற்காலிக வீடுகளில் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றன.
அத்துடன் கடந்த 2018ம் மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட வீடு திட்டங்களை பெற்றுக் கொண்டவர்களும் அதற்கான நிதி முழுமையாக வழங்கப்படாத நிலையில் வீட்டுத்திட்டங்களை நிறைவுறுத்த முடியாமலும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய வீட்டு சேவைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட அரச அதிபர் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் முப்பத்து மூவாயிரத்து 280 ; குடும்பங்களுக்கான வீட்டு தேவைகள் காணப்படுகின்றன.
இதில் இதுவரை இருபத்தி எட்டாயிரத்து 677 குடும்பங்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டாயிரத்து 433 குடும்பங்களும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 439 குடும்பங்களும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 104 குடும்பங்களுக்கும்,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளார் பிரிவில் 627 குடும்பங்களுக்குமாக மாவட்டத்திலுள்ள நான்காயிரத்து 603 குடும்பங்களுக்கான வீட்டு தேவைகள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2018 ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்திய வீட்டுத் திட்டங்களை பெற்றுக் கொண்ட நான்காயிரத்து 952 குடும்பங்களுக்குரிய வீட்டு திட்டங்களை நிறைவுறுத்துவதற்கான கொடுப்பனவாக 1912.7 மில்லியன் ரூபா நிதியை வழங்க வேண்டி இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.