உள்ளூர் கடன் மறுசீரமைப்பு என்ற சாக்குப்போக்கில் ஐந்து நாட்களுக்கு வங்கிகளை கொள்ளையடிக்கும் விளையாட்டை விளையாட அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(26.06.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது சில அமைச்சர்கள் எண்ணெய் வரிசை இல்லை, மின்வெட்டு இல்லை, நாடு நன்றாக இயங்குகிறது என்று கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
உடைமைகளை விற்கும் மக்கள்
வரலாற்றில் முதன்முறையாக 34 வீதமான மக்கள் குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் போன்றவற்றை விற்பனை செய்துள்ளனர்.
வருமானத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் தனது உடைமைகளை விற்பனைசென்கின்றனர். மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர்.
மாணவர்களுக்கு புத்தகப் பை கிடைக்காது, ஒரு ஜோடி காலணிகள் வாங்க முடியாது தவிக்கின்றனர். நாட்டைக் காப்பாற்றச் வேண்டியவர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
வரி, மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம், பொருட்களின் விலை ஆகியவற்றால் நாடு ஒடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் குழந்தைகளின் எதிர்காலம் முற்றாக பாழாகியிருக்கும் நிலையில், இப்போது அரசாங்கம் “அஸ்வேசும” என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
இந்த திட்டத்தினால் விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை, சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை, ஏனைய நோய்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை என்பன நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில், சமூகத்தின் அடிமட்டத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி சமுர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஏமாற்று வேலை ஜனாதிபதி தேர்தல் வரை இழுத்தடிக்கும் வேலை. இது அரசியல் திட்டம் அல்லவா? இதிலிருந்து கிராம அலுவலர்கள் பின்வாங்கியது ஏன்?. என கேள்வி எழுப்பியுள்ளார்.