இலங்கைக்கு ஜுன் மாதத்தின் முதல் 20 நாட்களில் 61,183 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவித்துள்ளன.
ஜுன் மாதத்தில் 87,521 சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், தனது இலக்கில் 70 சதவீதத்தை அடைந்துள்ளது.
இலக்கை அடைய
அதன் படி, நாடு இலக்கை அடைய ஜுன் 21 – 30 காலப்பகுதியில் 26,338 சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வர வேண்டும். அதற்கு நாளாந்தம் சராசரியாக 2,633 பேர் வருகை தரவேண்டும்.
இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 585,669 சுற்றுலா பயணிகள் வரை நாட்டுக்குள் வந்துள்ளனர். ஜூன் மாதத்தில் இதுவரை நாளாந்த வருகை சராசரியாக 3,059 ஆக உள்ளது.
எவ்வாறாயினும், ஜுன் முதல் வாரத்தில் தினசரி சுற்றுலா பயணிகளின் வருகை 19,365 ஆகவுள்ளது. மேலும், வாரத்தில் இரண்டு வருகைகள் 20,541 ஆக அதிகரித்துள்ளது. மூன்றாவது வாரத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று மேம்பட்டு 20,986 ஆக இருந்தது.
முதலிடத்தில் இந்தியா
அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்தே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஜூன் மாதத்தில் மொத்த வருகையில் 28 சதவீதம் பேர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளார்கள்.
இரண்டாம் இடத்திலுள்ள ரஷ்யாவில் இருந்து 9 சதவீதம் பேரும் மூன்றாவது இடத்தில் உள்ள ஐக்கிய இராச்சியத்திலிருந்து 7 சதவீதம் பேரும் வருகை தந்துள்ளனர். தரவரிசையில் அவுஸ்திரேலியா நான்காவது இடத்திலும், சீனா ஒரு தரவரிசை முன்னேறி ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இதுதவிர, கனடா, ஜேர்மனி, அமெரிக்கா, மாலைதீவுகள் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகளும் இலங்கை வந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.