வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அவசரமான கலந்துரையாடலொன்று மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திலுள்ள சுகாதார அமைச்சில் நடைப்பெற்றுள்ளது.
தற்போது வடக்கில் டெங்கு நோய் மற்றும் பன்றிக்காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அவற்றினை துரித கதியில் கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாண சுகாதார அமைச்சர் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி மன்றங்களும், சுகாதார திணைக்களமும் இணைந்து தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் இணைந்த செயற்திட்ட முன்னெடுப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்,
சுகாதார திணைக்களமும் – உள்ளூராட்சி மன்றமும் இணைந்து செயற்படுதல், உள்ளூராட்சி சபைகள் குப்பைகளை அகற்ற உள்ளூராட்சி திணைக்களத்திடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொடுத்தல்,
பாடசாலைகளில் கழிவு முகாமைத்துவத்திற்காக குப்பை தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுத்தல், மாலை நேர வகுப்புக்கள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு அறிவுறுத்தல் வழங்குதல்,
டெங்கு சட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும்.