புத்தரின் தத்துவத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு நாட்டை விட்டு வெளியேறிய கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கு 18,000 தீவிர சீடர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சமூகத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்கள் என்றும், அவர்களில் உயர் பதவிகளின் பிரதிநிதிகள் பலர் இருப்பதாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.
பண மோசடி விசாரணை
கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான பண மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணையில் இதுவரை 06 நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவரின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோத சொத்துகள் விசாரணை பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.