தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை அதிமுக தொண்டர்களே எழுப்புகின்றனர்.
இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த ஜோசப் என்பவர் நீதிமன்றத்தை நாடி ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக மனுத்தாக்கல் செய்தார். அதே நேரத்தில் அப்பல்லோ தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும் மக்களுக்கு அவர்களுடைய பதில் திருப்தியாக இருக்கவில்லை.
இந்நிலையில் நீதிமன்றம் அப்பல்லோவை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்யாமல் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் பல்வேறு விளக்கங்களை கொடுத்தனர்.
முக்கியமாக ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஏன் வெளியிடவில்லை என்ற சந்தேகத்துக்கு பதில் அளிக்கும் விதமாக ஜெயலலிதா தான் அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார் என அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளதாக இணையதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதில் ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவி தானாக அகற்றப்பட்டதால் தான் அவர் உயிர் பிரிந்தது என அப்பல்லோ நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக செய்திகள் பரவுகின்றன.
இதனையடுத்து ஜெயலலிதாவின் சுவாசக் கருவி தானாக அகற்றப்பட்டதா இல்லை வேறு யாரேனும் அதை அகற்றினார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர். இதற்கு அப்பல்லோ தரப்பில் இருந்து விளக்கம் அளித்தால் தான் இந்த தகவல் உண்மையா? அல்லது வதந்தியா என்பது தெளிவாகும்.