டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகம் உள்ள இடமாக அரச நிறுவனங்களின் வளாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஒவ்வொரு அரச நிறுவனங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு ரஞ்சித் அசோக உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி குழுவின் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கையை, வட்டார சுகாதார மருத்துவ அதிகாரிக்கு மாதந்தோறும் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெங்கு ஒழிப்பு செயற்பாடு
டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகம் உள்ள இடமாக அரச நிறுவன வளாகங்களை அடையாளப்படுத்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘அரச நிறுவனங்களின் டெங்கு தடுப்பு தினமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.
அதன்படி, அன்றைய தினம், அனைத்து ஊழியர்களின் பங்களிப்புடன், நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து, காலை, 9.00 மணி முதல், 10.00 மணி வரை, ஒரு மணி நேரம் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.