லண்டனில் கொலைச் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளம் பெண்ணின் வழக்கிற்கான தீர்ப்பு செப்டெம்பர் மாதம் வழங்கப்படும் என லண்டன் பழைய பெய்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், குறித்த பெண்ணை கொலை செய்ததை பழைய பெய்லி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்தே லண்டன் பழைய பெய்லி நீதிமன்றம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளி இளம் பெண்ணான 19 வயதுடைய சபீதா, லண்டனில் குடியிருப்பு ஒன்றில் தங்கி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.
கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 19ஆம் திகதி, அதிகாலை 5.10 மணியளவில் சபீதா கூக்குரலிடும் சத்தம் கேட்டு, அருகிலுள்ள குடியிருப்பிலுள்ளவர்கள் சத்தம் கேட்ட இடத்திற்கு வந்து பார்க்கும் போது, சபீதாவின் அறையிலிருந்து இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.
தீர்ப்பிற்கான திகதி அறிவிப்பு
தகவலறிந்து பொலிஸார் அங்கு வந்தபோது சபீதா கழுத்தறுபட்ட நிலையில் போர்வைகளின் கீழ் கிடப்பதைக் கண்டுள்ளனர். மருத்துவ உதவிக்குழுவினர் காப்பாற்ற முயன்றும் பலனின்றி சம்பவதினத்தன்று காலை 6.00 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து பொலிஸார் கொலையாளியை தீவிரமாகத் தேடி வந்த நிலையில் தோட்டம் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த 23 வயதுடைய மஹர் என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பொலிஸார் அவரை கைது செய்ய முயலும் போது, அவசர உதவிக்குழுவினர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.
இந்நிலையில் அந்நபர் சபீதாவை கொலை செய்ததை பழைய பெய்லி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை சபீதா கொலை செய்யப்படுவதற்கு முன், இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளார்கள் என்பது விசாரணைகளில் வெளியாகியுள்ளது.