இலங்கையில் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு வழி வகுக்கும் உத்தேச சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு இலங்கை ஒலிபரப்புச் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு இலங்கை ஒலிப்பரப்பாளர் சங்கம் எழுதிய கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை ஒலிப்பரப்பாளர் சங்கம் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எந்தவொரு ஆலோசனையுமின்றி இந்த வரைவு சட்டமூலம் நாட்டின் ஒட்டுமொத்த ஊடக நிலப்பரப்பில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயகரமான விதிகளைக் கொண்டுள்ளது.
ஊடக ஒழுங்குமுறை ஆணைக்குழு
எனவே இந்தச் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சந்தேகத்திற்கிடமின்றி அது ஊடக வெளியை கட்டுப்படுத்தி நாட்டில் கருத்து சுதந்திரம், சிந்தனை மற்றும் மனச்சாட்சிக்கான இருண்ட நாட்களை அறிவிக்கும்.
ஜனாதிபதியால் மாத்திரம் நியமிக்கப்படும் மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஊடக ஒழுங்குமுறை ஆணைக்குழு, நாட்டின் சுயாதீன ஊடகங்கள் மீது தீங்கு விளைவிக்கும் ஒழுங்குமுறை பொறிமுறையையும், அணுகுமுறையையும் நடைமுறைப்படுத்துகின்றது என்றும் ஒலிபரப்பாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கருத்து சுதந்திரம்
இது குறித்து வரைவு சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்புடன் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளது.
குறிப்பாக அடிப்படை உரிமைகள், சிந்தனை மற்றும் மனசாட்சிக்கான உரிமை, சமத்துவத்திற்கான உரிமை, அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுடன் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளது.
இந்த வரைவு சட்டமூலம் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நாட்டில 4ஆவது தூண் என்ற கருத்தாக்கத்தின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிடுகிறது.
எனவே இந்த விடயம் தொடர்பாக மேலதிக உரையாடல் மற்றும் கலந்துரையாடலுக்கு வழியேற்படுத்தவேண்டும் என ஒலிப்பரப்பாளர் சங்கம் அமைச்சரிடம் கோரியுள்ளது.