பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி. இவர் முதல் ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் விடாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடர் நடைபெறுகிறது. 18 அணிகள் இரண்டு குழுக்களாக (சவுத் மற்றும் நார்த்) பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நார்த் குரூப் பிரிவில் உள்ள நாட்டிங்ஹாம்ஷயர், வார்விக்ஷையர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.
டாஸ் வென்ற வார்விக்ஷயர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த நாட்டிங்ஹாம்ஷயர் அணி 20 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக டாம் மூர்ஸ் 73 ரன்கள் எடுத்தார். வார்விக்ஷயர் அணி சார்பில் ஹசன் அலி, லிண்டொட் தலா 3 விக்கெட்களும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 169 ரன்கள் இலக்குடன் வார்விக்ஷயர் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அலெக்ஸ் டேவிஸ், ராபர்ட் யேட்ஸ் ஆடினர். நாட்டிங்ஹாம்ஷயர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி முதல் ஓவரை வீசினார்.
முதல் பந்தில் அலெக்ஸ் டேவிஸ் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். 2-வது பந்தில் கிறிஸ் பெஞ்சமின் கிளின் போல்டுஆனார்.
3-வது பந்தில் டான் மவுஸ்ஸி ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் யேட்ஸ் ஒரு ரன் எடுத்தார். 5-வது பந்தில் டான் மவுஸ்ஸி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
6-வது பந்தில் எட் பர்னார்ட் போல்டானார். இதன்மூலம் ஷாஹின் அப்ரிடி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், ஷாஷின் அப்ரிடி 4 ஓவர்களில் 29 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு மெய்டன் ஓவரையும் வீசி அசத்தி இருந்தார். ஆட்ட நாயகன் விருது ஷாஹின் அப்ரிடிக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய வார்விக் ஷையர் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.