ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை முன்னிறுத்துமாறு அக்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அந்த தேர்தலில் பசில் ராஜபக்ச போட்டியிட்டால், அவர் தனது அமெரிக்க குடியுரிமையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதுடன், அவர் இந்த விடயம் தொடர்பில் தற்போது பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி, பசில் ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து தேசியப்பட்டியல் எம்.பியாக நாடாளுமன்றத்திற்கு வந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வரும் பட்சத்தில் ஜயந்த ஜயகொட தனது தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்க தயாராக இருப்பதாகவும், மேலும் பல பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் எம்.பி.க்கள் ஆசனங்களை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
இது தொடர்பில் பசில் ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட மற்றும் பலம் வாய்ந்த உறுப்பினர்கள் கடந்த வாரம் பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் பல சுற்று விசேட கலந்துரையாடல்களை நடாத்தியதாகவும் அறியமுடிகிறது.
இதற்கமைய, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து ள்ளனர்.
இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் பசில் ராஜபக்ச மேலதிக தகவல்கள் எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தமது கட்சி தற்போது இரு வேட்பாளர்களை பரிசீலித்து வருவதாகவும் அவர்களில் ஒருவர் பொருளாதாரம் தொடர்பில் நன்கு அறிந்தவர் எனவும், மற்றையவர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பேற்கக் கூடியவர் எனவும் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.