நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை இல்லமாக விளங்கும் நுவரெலியாவில் உள்ள ஜெனரல் ஹவுஸ் விடுதியில் அறைகளை முன்பதிவு செய்யும் போது சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கட்டாயம் உடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற சபை குழு தீர்மானித்துள்ளது.
விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு
அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் என்று கூறிக்கொண்டு பலர் இந்த மாளிகையில் அறைகளை முன்பதிவு செய்வதாக பலர் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் சிலர், கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டதன் காரணமாக, அங்கு தங்கியிருந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் ஹவுஸ் என்பது பிரித்தானிய காலனித்துவ கால விடுதியாகும். இந்த விடுதியின் ஒரு அறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக அதிக மானிய விலையான 1000 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.