வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரிக்க அதிபரின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற பின், பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் அதிபர், டொனால்டு டிரம்ப், தற்போது, ஊடகங்களின் பக்கம், தன் பார்வையை திருப்பியுள்ளார்.
அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அலுவல் பணிகள் நடக்கும் வெள்ளை மாளிகையில், செய்தி சேகரிக்க, ‘தி நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்ஜல்ஸ் டைம்ஸ், பி.பி.சி., பொலிடிக்கோ’ மற்றும் கார்டியன் உள்ளிட்ட முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
அதிபர் டிரம்ப் தலைமையில் நடந்த முக்கிய கூட்டம் குறித்த செய்தியை சேகரிக்க சென்ற, மேற்கண்ட செய்தி நிறுவனங்களை, வெள்ளை மாளிகையின் உள்ளே விடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து, செய்தியாளர்கள் விளக்கம் கேட்டதற்கு, ‘இது அதிபரின் உத்தரவு’ என, பதிலளித்தனர். அமெரிக்க அரசின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை’ என, அந்நிறுவனம் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அதிபர் டிரம்ப் கூறியதாவது:
வெள்ளை மாளிகையில் தினமும் நடக்கும் அன்றாட பணிகளை, செய்தி நிறுவ னங்கள் செய்தியாக்க வேண்டிய அவசியம் இல்லை.
நான் ஊடகங்களுக்கோ, பத்திரிகையாளர்களுக்கோ எதிரானவன் அல்ல. பொய்யான செய்திகளை வெறுக்கிறேன்.
ஆதாரமற்ற பொய்யான தகவல்கள், செய்திகள் என்ற பெயரில் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.
ஆதாரமற்ற தகவல்களை பரப்பும் செய்தி நிறுவனங்கள், அந்த தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன; அதை தந்தது யார் என்ற தகவல்களை வெளியிட மறுப்பது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.