ராகம வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஜாஎல வடக்கு படகம, எவேரியா வத்த பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஹன்சிகா சஜனி பெரேரா என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
திடீர் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட தடுப்பூசியினால் ஏற்றப்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
குறித்த பெண்ணின் உடலில் காணப்பட்ட கிருமி தொற்றுக்கு சிகிச்சைக்காக வழங்கப்பட்ட தடுப்பூசி ஒவ்வாமை காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை மேற்கொண்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் விடயம் தொடர்பில் தற்போது முதலாவது அறிக்கை கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.