வாக்னர் வாடகை படையைச் சேர்ந்த துருப்புக்களின் இழப்பால் உக்ரைன் – ரஷ்ய போரில் மாஸ்கோவின் போர் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரஷ்ய இராணுவத்திற்கும், வாக்னர் வாடகைப் படைக்கும் இடையிலான முறுகல் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், ரஷ்ய இராணுவ தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட தீர்மானித்த வாக்னர் வாடகை படை, கடைசி கட்டத்தில் தனது திட்டத்தை கைவிட்டதோடு, வாக்னர் வாடகை படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டார்.
புடின் மீது குற்றச்சாட்டு
இதனிடையே, உக்ரைன் எல்லையில் இருந்து 142 மைல்கள் தொலைவில், கைவிடப்பட்ட இராணுவ முகாமை வாக்னர் வாடகை படையினர் பயன்படுவதற்கான அனுமதியை பெலாரஸ் அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உக்ரைன் படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், 8,000 வீரர்களை வாக்னர் வாடகை படை தற்போது திரட்டியுள்ளதாகவும், இவர்கள் உக்ரைனுக்கு ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும் அஞ்சப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஷ்யாவினால் உக்ரைனில் மேற்கொள்ளப்படும் முறையற்ற ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக ஒரு புதிய மையம் உக்ரைனில் திறக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரேன் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்திய குற்றசாட்டுக்காக கைது செய்யக்கோரி ஐசிசி பிடியாணை உத்தரவையும் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.