முதலில் ஆடிய நெதர்லாந்து 362 ரன்கள் குவித்தது. இறுதியில், நெதர்லாந்து 74 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹராரேவில் நேற்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் நெதர்லாந்து, ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் மழை பெய்ததால் போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் 110 ரன்கள் எடுத்தார். பரேசி 97 ரன்கள் எடுத்து 3 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
இதையடுத்து, 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. ஓமன் அணியின் அயான் கான் மட்டும் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
அவர் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் ஓமன் அணி 48 ஓவரில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நெதர்லாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விக்ரம்ஜித் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.