ஸ்பெயின் நாட்டில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத வகையில் கிடு கிடுவென சரிந்துள்ள நிலையில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு கொள்கை விளக்க தூதுவர் ஒருவரை நியமித்துள்ளது அந்த நாட்டு அரசு.
கடந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து அரசு துரித நடவடிக்கையில் இறங்கியிருந்தது. ஆனால் அதற்கான பலன் இன்னும் புலப்படாததை அடுத்து ஸ்பெயின் அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி மக்கள் தொகை அதிகரிப்பதன் தேவையை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் பொருட்டு மக்கள் தொகை நிபுணரான Edelmira Barreira என்பவரை கொள்கை விளக்க தூதுவராக நியமித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டு பெண்கள் தங்களுக்கு இரண்டும் அதற்கு மேலும் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பெண்களின் இந்த கூற்று மாறுபட்ட விகிதத்தை அளித்துள்ளது.
18 ல் இருந்து 49 வயது வரையான பெண்களில் சராசரியாக 1.3 குழந்தைகள் என்ற விகிதமாகவே இருந்துள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தை விடவும் குறைவு என கூறப்படுகிறது.
பிறப்பு விகிதம் குறைவது ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் சாதாரணமாக மாறியுள்ள நிலையில் ஸ்பெயின் நாடு மிகவும் பரிதாப நிலையில் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.