தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பான முழுமையான அறிக்கையை சுங்க திணைக்களம் சமர்ப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
100 கோடி பெறுமதியான சட்டவிரோத தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த அலி சப்ரி ரஹீம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பில் சுங்கப் பிரிவினர் இந்த அறிக்கையை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அறிக்கையை அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சமர்ப்பித்து இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுங்க அதிகாரிகளால் கைது
இந்நிலையில், சம்பவம் தொடர்பான காரணத்தை ரஹீமிடம் விளக்கமளிக்குமாறு சபாநாயகர் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் ரஹீம் எந்த ஒரு கருத்தையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 23 அன்று சட்டவிரோத தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளுடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், 75 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.