சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம். பிரபஞ்சத்தில் சூரிய சக்தி அளப்பரியது. இயற்கையான சூரியனை வணங்குவதும் வழிபடுவதும் சாலச்சிறந்தது என்கிறார்கள் முன்னோர்கள்.
வருடந்தோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். கிட்டத்தட்ட அது சூரியனுக்கு நாம் செலுத்தும் வணக்கம். அதேபோல, வருடம் 365 நாளும் சூரிய வணக்கம் செய்வதும் சூரிய பகவானை வணங்குவதும் நம்மையும் நம் இல்லத்தையும் செழிப்பாக்கவல்லது. எந்த பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம்தானே. அதேபோல, ஒவ்வொருநாளும் சூரியனைப் பார்த்து நமஸ்கரிக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த ஞாயிறு நாளில், நம் முதல் வணக்கம், சூரிய பகவானுக்கு என இருக்கட்டும். சூரிய பகவானை கிழக்கு நோக்கி தரிசிப்போம். இந்த உலகத்துக்காகவும் உலக மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.
கிழக்கு நோக்கி நிற்பதும் அமர்வதும் அமர்ந்து சாப்பிடுவதும் உன்னதமான விஷயங்கள். கிழக்கு என்பது விடியலின் குறியீடாகியிருக்கிறது. கிழக்கில் உதிக்கும் சூரிய பகவானும் நம் வாழ்வின் விடியலுக்கான வரப்பிரசாதி. எனவே, சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். ஞாயிறு நாளில், சூரிய நமஸ்காரம் செய்வோம். சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம். ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வோம். இயலாதவர்கள், ஆதித்ய ஹ்ருதயத்தை காதாரக் கேட்பதே பலம் சேர்க்கும். வலு கொடுக்கும். வளமாக்கும். ஆதித்ய ஹ்ருதயம் சொல்லச் சொல்ல, கேட்கக் கேட்க, தீய சக்திகளின் தாக்கம் குறையும். நல்ல நல்ல கதிர்வீச்சுகள் நம்மைச் சூழும். அரணெனக் காக்கும். ஆயுள் பலம் தந்தருளும். செய்யும் காரியங்கள் யாவும் வீரியமாகும்.