பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் இடையில் கடந்த 17 ஆம் திகதி சிங்கப்பூரில் இரகசியமான பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் ரணில், தனது அவுஸ்திரேலிய விஜயத்தை முடித்து கொண்டு வரும் வழியில் கடந்த 17 ஆம் திகதி சிங்கப்பூரில் தங்கினார்.
சிகிச்சை பெற செல்வதாக கூறி அதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச சிங்கப்பூர் சென்று அங்குள்ள ஷெங்ரிலா ஹோட்டலில் தங்கியுள்ளார். அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் சிகிச்சைக்காக செல்வதாக கூறி இலங்கையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் ரணில், அமைச்சர் சாகல மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ஆகியோருக்கு இடையிலான இரகசியமான பேச்சுவார்த்தை கிராண்ட் ஹயட் ஹோட்டலில் கடந்த 17 ஆம் திகதி நடந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலைகள், மிகப் பெரியளவிலான நிதி மோசடிகள் குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு என்பன நடத்தி வரும் விசாரணைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.
ராஜபக்சவினருக்கு வெளிநாடுகளில் உள்ள பணம் தொடர்பான பல தகவல்களை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த தகவல்களை மூடி மறைத்து ராஜபக்ச குடும்பத்தினரை குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பாற்றுவது எப்படி என்பதே சிங்கப்பூரில் நடந்த இரகசியமான பேச்சுவார்த்தையின் பிரதான நோக்கம் என சிங்கள இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், எவ்வித அழுத்தங்களுக்கும் அடிப்பணியாது விசாரணைகளை மேற்கொண்ட நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களை இடமாற்றம் செய்து ராஜபக்சவினரை காப்பாற்றுவது என முதல் கட்டமாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
இலங்கை திரும்பியுள்ள சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் கடந்த ஆட்சிக்காலத்தில் குற்றச் செயல்கள், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் தகுதி தராதரம் பாராது அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில் மாத்திரமல்லாது தற்போதைய அரசாங்கத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.