அதிரடியாக விளையாடி இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து 80 ரன்கள் குவித்தார். டி20 தொடரை நியூசிலாந்து பெண்கள் அணி கைப்பற்றியது.
நியூசிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதனையடுத்து டி20 தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய இலங்கை பெண்கள் அணி 14.3 ஓவரில் 143 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் டி20 போட்டிகளில் முதன் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது. அதிரடியாக விளையாடி இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து 80 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை தட்டிச்சென்றார்.