நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எட்டு பேரும் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (12.07.2023) முன்னிலைப்படுத்தபட்ட போது நீதவான் ஷாமினிமா விஜேபண்டார மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவு
அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் எட்டு பேரில் எழுவரை சாட்சியாளர்கள் இருவர் அடையாளம் கண்டுப்பிடித்துள்ளனர். ஒரு சாட்சியாளரை எவரும் அடையாளம் காட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முறைப்பாட்டார்கள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, சம்பவம் தொடர்பில் இன்னும் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்படவேண்டி உள்ளனர்.
ஆகையால், அதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்துமாறும், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என்றும் நீதிமன்றிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்களை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேருக்கும் இவ்வாறு விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.