உச்சி மாநாட்டில் உக்ரைனுக்கு இன்று மூன்றாவது வெற்றி என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
லிதுவேனியாவின் வில்நீயஸ் நகரில் நேட்டோ உச்சி மாநாட்டில் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரிஷி சுனக் உடனான சந்திப்பினை தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இச்சந்திப்பில், உக்ரைனின் பாதுகாப்பு தேவைகள் , போர்களத்தில் உக்ரைனிய இராணுவத்தின் திறன்களை விரிவுப்படுத்துவதற்கான கூடுதல் ஒத்துழைப்பு, குறிப்பாக நீண்ட தூர ஆயுதங்கள் மற்றும் எதிர்காலத்தில் நவீன மேற்கத்திய விமான போக்குவரத்து குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகால நிதியுதவி
இதுதொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“நேட்டோவில் உக்ரைன் இணைவதை ஆதரித்ததற்காகவும், கூட்டணியில் உறுப்பினராவதற்கு முந்தைய காலத்திற்கு, உக்ரைனுக்கு பயனுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதில் பங்கேற்றதற்காகவும், பிரதமர் மற்றும் பிரித்தானியாவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
சமீபத்தில் லண்டனில் உக்ரைன் மீட்பு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும், குறிப்பாக உக்ரைனின் புனரமைப்புக்காக முடக்கப்பட்ட சொத்துக்களை ஒதுக்குவதன் மூலம், நமது நாட்டிற்கு நீண்டகால நிதியுதவியை வழங்க எடுக்கப்பட்ட முடிவுகளுக்காகவும், நான் குறிப்பாக பிரித்தானியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.