ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 12. புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல். ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிளாக்ஷிப் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தான் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஒன்பிளஸ் 11 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி வரும் ஒன்பிளஸ் 12 டிசைன் எப்படி இருக்கும் என்று தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது.
பிரபல டிப்ஸ்டரான @OnLeaks வெளியிட்டு இருக்கும் ரென்டர்களில், ஒன்பிளஸ் 12 மாடல் மெல்லிய டிசைன், கிளாசி பிளாக் நிறம் மற்றும் ஒன்பிளஸ் பாரம்பரிய சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய ஒன்பிளஸ் 12 மாடலில் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்றே பெரிஸ்கோபிக் டெலிபோட்டோ லென்ஸ் செட்டப் வழங்கப்படுகிறது. கேமரா மாட்யுல் பிளாக் நிற ஸ்ட்ரிப், ஹேசில்பிலாட் பிரான்டிங் கொண்டிருக்கிறது. இவை பக்கவாட்டு ஃபிரேம் பகுதியில் சீராக இணைவதை போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கேமரா ரிங்-இன் கீழ்புறத்தில் க்ரோம் அக்சென்ட் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பம்ப் உள்ளது. பெரிஸ்கோபிக் லென்ஸ்களை வைப்பதற்காக, எல்இடி ஃபிலாஷ் கேமரா ஐலேன்ட்-இன் இடதுபுறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. ஒன்பிளஸ் 12 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மெல்லிய பெசல்களை கொண்டிருக்கின்றன. இத்துடன் பன்ச் ஹோல் டிசைன், ஸ்மார்ட்போனின் நடுவில் வைக்கப்பட்டு இருக்கிறது. இது சாதனத்தின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12 மாடலில் வளைந்த 2K டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 120Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 150 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ 750 GPU வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP வைடு ஆங்கில் லென்ஸ், 64MP ஆம்னிவிஷன் பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது. வரும் மாதங்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய மேலும் புதிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.