சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தினமும் காலையில் தியானம் செய்வது, ஜெயலலிதா வைத்த துளசி மாடத்தை வழிபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வப்போது குட்டித் தூக்கம் போடும் சசிகலா டிவி பார்த்து பொழுதை கழித்து வருகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 16 ஆம் தேதி அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாளில் சலுகைகளை வழங்க மறுத்து கடுமையாக காட்டிக் கொண்ட சிறை நிர்வாகம் பின்னர் ஒவ்வொரு சலுகையாக அளித்து வருகிறது.
இதனிடையே சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஒவ்வொரு நாளையும் எப்படி கழிக்கிறார் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாள்தோறும் காலை 5 மணிக்கு சிறையில் எழுந்துகொள்ளும் சசிகலா, ஒரு மணிநேரம் அறையிலேயே அமர்ந்து தியானம் செய்கிறார். பின்னர் 6.30 மணிக்கு வெந்நீரில் சசிகலா குளிப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சிறைக்குள் இருக்கும் அம்மன் கோயிலுக்கு இளவரசியோடு சென்று சாமி கும்பிடுகிறார். அங்கு ஏற்கனவே ஜெயலலிதா வைத்த துளசி மாடத்தையும் சசிகலா சுற்றி வருகிறாராம்.
பின்னர் செய்தித்தாள்களை படிக்கும் சசிகலா காலை 8.30 மணிக்கு டிபன் சாப்பிடுகிறார். இதைத்தொடர்ந்து இளவரசியும் சசிகலா டிவி பார்க்கின்றனர்.
மதியம் 2 மணிக்கு மதிய சாப்பாட்டை சாப்பிடும் சசிகலாவும் இளவரசியும் பின்னர் ஒரு குட்டித் தூக்கம் போடுகின்றனராம். இதைத்தொடர்ந்து மீண்டும் டிவி பார்க்கும் இருவரும் 5 முதல் 6 மணி வரை தங்களின் உறவினர்களோடு பேசுகின்றனராம்.
இரவு 7.30 மணிக்கு இரவு சாப்பாட்டை முடித்து விடும் அவர்கள் 11 மணி வரை பேசிக்கொண்டு இருக்கின்றனராம். 11 மணிக்கு மேல் தான் இருவரும் தூங்கச் செல்கின்றனராம்.