இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கும் போதிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை, தமது புதிய ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கொழும்பில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்கள் மீது குறிப்பாக கவனம் செலுத்தி, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கான அணுகலில் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உணவுகளை வழங்குவது தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
வீழ்ச்சியடைந்த வருமானம், வாழ்வாதார இழப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவை பெண்களின் கொள்வனவுத் திறனைக் குறைத்துள்ளன.
அதேநேரத்தில் தாய்வழி ஊட்டச்சத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தீவிரம், சுகாதாரம் மற்றும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் நிலைமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதி பிராந்திய பணிப்பாளர் தினுஸ்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பின்மை
இந்தநிலையில் நீண்ட உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் போதிய ஊட்டச்சத்து ஆகியவை கவனிக்கப்படாமல் விடப்பட்டால், தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு கடுமையான நீண்டகால விளைவுகளுக்கு அவை வழிவகுக்கும்.
எனவே கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு போதுமான, மலிவு மற்றும் நல்ல தரமான போசாக்கை அணுகுவதை உறுதி செய்தல் உட்பட, விடயங்களில் இலங்கை அரசாங்கம் தனது சர்வதேச மனித உரிமைக் கடமைகளை அவசரமாக நிறைவேற்ற வேண்டும்.
அத்துடன் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு போதிய உணவு மற்றும் போசாக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகமும் அரசாங்கத்திற்கு ஆதரவாக பங்களிக்க வேண்டும் என தினுஸ்க திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.